இருத்தல் - கவிதைகள்

 1.


என்னை உங்களுக்கு 

நன்றாகத் தெரியும் 

ஊழ் வினைக்குப் பயந்து 

துரத்திய திசையெல்லாம் காற்றைப் போல 

தன்னை உணர்த்தியும் 

உணர்த்தாமலும்


கதைகளின் சாரமும் கற்பிதங்களின் மூலமும் 

என்னைப் பிடித்துக்கொண்டு ஆட்டும் கூத்து 

நவரசம் கலந்து 

பரவசம் கடந்து 

சொர்க்கத்தில் இடம் 

தேடி 

தலைமுறை வாழ்வு 

வேண்டி 

அக்கினிக் குளியலில் 

அப்படியே வெளிவர ஆசைப்பட்டேன் 

சுட்டெரிந்தது உடலம் 

வேதனையின் உச்சம் 

மரணத்தின் வாசலில் 

காதுகளில் கேட்டது  

அறமும் அற நிமித்தமும் 

மற்றொரு உயிரைக் கேட்டு!


2.


பேசிக்கொண்டே இருக்கிறேன் 

வியந்து பார்க்கும்

ஜன்னலின் குறும்பு 

காற்றைச் சுட்டியது 

கோபச் சிரிப்பில் 

கடந்துவிட்ட காற்றைத் தேடி 

மனமது ஓடியது 

பேசிக்கொண்டே இருந்தேன் 

எனது பேச்சொலி 

எங்கும் கேட்கவில்லை 

ஆரவாரமும் களேபரமும் 

சுற்றிச் சூழ்ந்து

பேயாட்டம் ஆடியது 

அப்போதும் 

பேசிக்கொண்டே இருந்தேன் திடீரென 

மௌனத்தின் பேரடியில் 

மல்லாந்து கிடந்தேன் 

பேச்சடங்கி 

சூனியத்தின் பெருவெள்ளம் 

சுழன்றடித்து 

வாரிச் சென்றது சேர்த்து வைத்த 

குப்பைகள் அனைத்தையும் 

இப்போதும் 

பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் 

எனக்கு மட்டும் 

கேட்கும் குரலில்!


3.


அவமானத்தின் சுவடுகளே

அங்கீகாரத்தின் எல்லையென்றால்

கூட்டுப் புழுவாய்

இருந்து விடவே

விரும்புகிறது மனம்


எனது 

இருத்தலை இருத்திக்கொள்ள 

இருத்தலுக்குள் இருத்தலாகி 

ஒன்றுமில்லா 

யாவையுமாகி 

ஒளிந்து கொண்டேன் 

யாருக்கும் தெரியாமல் 

எனக்குள் நான்.


      - முனைவர் ம இராமச்சந்திரன்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்