அவதாரம் - அப்துல் ரகுமான் (பித்தன் கவிதை தொகுப்பு)
எல்லோரும்
மலையின் மீது
ஏறி கொண்டிருந்தபோது
பித்தன் மட்டும்
கீழே
இறங்கிக் கொண்டிருந்தான்.
'நீ ஏன்
இறங்கி கொண்டிருக்கிறாய்?' என்று கேட்டேன்.
'மேலே செல்வதற்காக'
என்றான்.
அவன் மேலும் சொன்னான்;
கீழே விழும்
விதை தான்
மேலே செல்கிறது.
ஏற்றம்
இறக்கத்தில் தான்
நீரை முகக்கிறது.
தராசில்
கனமான தட்டே
கீழே இறங்குகிறது.
அரியாசனத்தில்
ஏறுகிறவனுக்கல்ல;
இறங்குகிறவனுக்கே
இதிகாசம் கிடைக்கிறது.
இறங்கும் மேகமே
பூமியின்
தாகம் தீர்க்கிறது.
பறக்கும் போதல்ல
அருந்து விழுந்த பிறகே
பட்டத்திற்கு
அமைதி கிடைக்கிறது.
ஆரோகணத்தில் அல்ல அவரோகணத்தில் தான்
ஸ்வரங்கள்
கூட்டை அடைகின்றன.
இறங்குவது
பரவசம்;
அதனால் அல்லவா
அருவி பாடுகிறது.
பறப்பவன்
முடியைக்
காணாமல் போகலாம்.
இறங்குபவன்
அடியைக்
கண்டு விடுவான்.
பழுத்த கனியே
கீழே இறங்கும்.
31.10.2021.
கருத்துகள்