சுகுமாரனின் 'கோடை காலக் குறிப்புகள்' வழி எனது நினைவுத் தடங்களும் சமூக யதார்த்தமும்

 சுகுமாரனின் 'கோடை காலக் குறிப்புகள்' வழி எனது நினைவுத் தடங்களும் சமூக யதார்த்தமும்

மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் (1995-2000) இலக்கியம் எனக்கு அறிமுகமானது. ஜெயகாந்தனின் சிறுகதைகள் என்னுள் வலுவாக வினையாற்றி ரோடுகளையும் நாய்களையும் பிச்சைக்காரர்களையும் வேசிகளையும் உற்று நோக்கவும் மதிப்புக்கொடுக்கவும் கற்றுக் கொடுத்தன. ஜெயகாந்தனின் நூல்களை வாங்க மீனாட்சி புத்தக நிலையத்தைத் தேடி அலைந்தேன். அதன் பயனாக சர்வோதய இலக்கிய பண்ணை, பாரதி புத்தக நிலையம் எனக்கு நெருக்கமானது. பாரதி புத்தக நிலையம் பல சிற்றிதழ்களை அறிமுகப்படுத்தியது. அங்குச் சிறு பத்திரிக்கையாளர்களின் வருகை தொடர்ந்து இருந்தது. பத்திரிக்கைகள் அங்கு அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அனைத்தையும் வாங்கி செல்ல மனம் இருந்தாலும் பணம் இல்லாததால் வாங்கிய பத்திரிக்கைகளில் காலச்சுவடும், உயிர்மையும் என்னுள் கலந்து இலக்கிய வெளியை விரிவாக்கின. ஒவ்வொரு முறையும் இவற்றை வாங்கும் போது கண்கள் என்னைமீறி தேடி அலையும் பெயர் சுகுமாறன். இவரின் உரைநடைக்கு அடிமையாகி அகமகிழ்ந்து பயணப்பட்ட அனுபவம் எந்த வாசிப்பிலும் தவறியதில்லை. இத்தகைய அனுபவத்தைக் கொடுத்த மற்றொரு எழுத்தாளர் அ.முத்துலிங்கம்.

சுகுமாரனின் உரைநடையில் திளைத்த எனக்குக் கவிஞர் சுகுமாரன் பெரும் வியப்பை ஏற்படுத்தினார். 2006இல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிநிமித்தமாகத் தருமபுரியில் வாழ்ந்து வந்தேன். அப்போது நண்பர்கள் மூலமாக எனக்கு அறிமுகமான புத்தகம் 'கோடை காலக் குறிப்புகள்'. இதற்குப் பிரம்மராஜன் முன்னுரை எழுதியிருந்தார். அகரம் பதிப்பகம் வெளியிட்டிருந்தது. ஜெயகாந்தனின் படைப்புகளை வாசித்ததின் பயனாக முன்னுரையின் முக்கியத்துவம் புரிந்தது. ஆகையால் முன்னுரை வாசிப்பு என்பது முக்கிய நிகழ்வாக என்னுள் மாறிப்போனது. ஆல்பர்ட் காம்யு அறிமுகமானார். இவ்வாறு கோடைகாலம் என் நினைவுகளில் பல குறிப்புகளை எனக்கு மீண்டும் மீட்டுத் தந்தது. கவிதையின் ஆன்ம வினையும் எனது ஆன்ம வினையும் சந்திக்கும் பல புள்ளிகள் கவிதையின் ஊடாக வந்து வந்துபோயின. பல இடங்களில் கவிதைகளை வாசித்துப் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு அமைதியான தருணங்கள் அனேகம்.

"கத்தி போலப் படிமங்களாலும் பளிச்சிடும் உருவகங்களாலும் ஆனவை. வடிவச் சிறப்பு, சொற் சிக்கனம், உசீர்வுச் செறிவு, நேர்த்தியான கட்டமைப்பு இப்படியாக நவீன கவிதையில் தனித்தன்மையுள்ளவை. மலையிருந்து இறங்கிவரும் நதிபோல வேகமானவை. ஆனால் அக்னி நதி."  

என்ற விக்ரமாதித்யனின் சொற்கள் ஒவ்வொரு கவிதையைப் படிக்கும் போதும் நினைவில் வந்து போகின்றன. அதேபோல புத்தகத்தின் இறுதியில் 2006 இல் எழுதப்பட்ட எனது அனுபவத்தையும்  இங்கே எண்ணிப் பார்க்கிறேன். "வாசிக்கப்பட்டது. கவிஞனின் வாழ்நிலையும் எனது வாழ்நிலையும் ஒத்தும் இணைந்தும் செல்கின்றன. கவிஞரின் பல கவிதைகளில் என்னைக் காண்கிறேன். நல்ல கவிஞர் கவிதையும் அவ்வாறே" என்பதை இன்று வாசிக்கும்போதும் எந்த மாற்றமும் தேவைப்படவில்லை. இன்று ஏற்பட்ட வாசிப்பு அனுபவம் என்னையும் எனக்குள் துளிர்க்கும் கவி மனதையும் அடையாளம் காட்டுவதை உணர்கிறேன். எனது கவிதை வடிவத்தைக் கட்டமைக்க, நெறிப்படுத்த இந்த வாசிப்பு உதவியது.

இது, நிகழ் கவிதை ஆகஸ்டு 77 இல் தொடங்கி 1984 வரை ஏழு ஆண்டுகள் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நூல். இவ்வளவு குறைவாக எழுதப்பட்ட கவிதைகள் என்பதைவிட கவிஞனின் பொறுமையும் கவிதையின் கவித்துவமும் இங்கு மேலோங்கி நிற்கின்றன. மேலும் கவிதைக்குள் அடிக்குறிப்பு தருவதும் இசை கவிதையில் ஹரிக்கும் சீனிவாசனுக்கும் ஹரிபிரசாத் சௌராசியாவுக்கும் யேசுதாஸ்க்கும்  என்பதும் சில்வியா பிளாத் மேற்கோளாக வருவதும் சிறுபத்திரிக்கைத்தனத்தின் அடையாளங்களாக விளங்குகின்றன. ஆத்மாநாம், சில்வியா பிளாத் போன்றோர் இதன் மூலம் எனக்கு அறிமுகமானவர்கள். இசைக் குறித்த அனுபவங்களின் ஊடாகப் பயணிக்க முயன்றுகொண்டே அன்று முதல் இன்று வரை இருக்கிறேன். இங்கு பிரம்மராஜனின் எண்ணங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன்

"சுகுமாரனின் கவிதையே முதன் முறையாகக் கணையாழி இதழில் படிக்க நேரிட்டது. இசை என்னும் அரூப கலையின் உணர்ச்சிமிக்க பாதிப்புகளை அதில் படித்தவுடன் கவிதையும் கலைஞனும் எனக்கு அடையாளப்பட்டுப் போனார்கள்.

"விரல்களில் அவிழ்ந்தது தாளம் புறங்களில் வீசி கசிந்தது குரல்

.........    ....              .....

ஈரம் சுருங்கிய பிடி மணலாய்ப் பிளந்தேன் 

தொலைவானின் அடியில் 

நூலறுந்த பலூன்" 

இவ்வரிகளில் சுகுமாரனுக்கு இசையின் அனுபவம் தந்ததை இசையை 'உணர்பவர்கள்' அறிவார்கள். அவ்வாறே அதன் கவிதையையும்" என்பது கவிஞரையும் கவிதையின் தரத்தையும் உணர்ந்து கொள்ள உதவும்.

பெரும் வியப்பில் ஆழ்த்துகின்ற கவிதையாக வளர்ப்பு மிருகம் விளங்குகிறது. வாசகர் சிந்தனையில் பலவிதமான சொந்த அனுபவங்களைக் கட்டி எழுப்பி அவனை உறைய வைத்துவிடுகிறது. எதற்கும் தன்னைப் பொறுத்திக் கொள்ளக் கூடிய அற்புத அனுபவ வெளிப்பாடு இக்கவிதை. கவிஞனின் இருப்பை உறுதிப்படுத்தும் அனைத்து சாத்தியப்பாட்டையும் தன்னுள் கொண்டு தொடர் வாசிப்புக்கு அச்சாரம் போட்டு விடுகிறது இது.


"தொல்லை தாளாமல் 

நம்பிக்கைகளைக் கோர்த்து சங்கிலியால் 

கட்டி வைத்தேன் 

உலாவப் போகையில் சங்கிலிகள் புரளக் 

கூட வந்தது 

பிறகு 

இழுத்துப் போக வலுவற்ற என்னை

இழுத்துப் போகத் தொடங்கியது சங்கிலி சுருளில் மூச்சுத் திணற சிக்கிக் கொண்டேன் நான் 

விடுபடத் தவிப்பதே விதியாச்சு"


என்ற கவிதை வரிகளின் கட்டமைப்பில் ஒரு அழுத்தத்தைத் தருவதாக ஒற்றைச் சொற்கள் விளங்குகின்றன (தவிர்த்து, இறங்கி, பிறகு, ஒரு நாள்).

அறம் அறமற்றது; நல்லது கெட்டது; உண்மையானது பொய்யானது; மானம் அவமானம் என்ற மனித உணர்வுகளைப் பற்றி மருந்துக்கும் அறிந்திராத பசிக்கு என்ன சமாதானம் சொல்ல முடியும். அடுத்தது என்ற எதிர்கால சிந்தனைக்கு ஒரு தூண்டுகோல் பசி தான். பசித்தவனின் வயிறு அதுவும் அறம் சார்ந்த கோட்பாட்டு வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட  ஒருவனது பசி புறக்கணிக்கப்படும் போது இது போன்ற காலத்தை அழித்த கவிதைகள் பிறந்துவிட நேரிடும்.


"சொற்பம் கையிருப்பு

தங்கும் சுவர்களின் பாதுகாப்பற்று

ரயில்வே பிளாட்பாரத்துக்கு விரட்டப்பட்டேன்

காலி வயிற்றுடன் 

தூக்கம் புறக்கணித்த நீளமான இரவு முடியக் காத்திருந்தேன்"


கடிகாரம், நொண்டி குருவி, அகாலமாய் மல்லிகைச் சூடிய பெண், பிரயாணிகள் என்று இயலாமையும் வாழ்தலில் ஏற்பட்ட பொறாமையும் வன்மமும் அலைக்கழிக்கும் சமூக பின்புலத்தை உணரும்போது சமூகத்தின் மனித அக்கறையின்மை என்ற கொடூரம் ஓங்கி மூளையில் அறைவதைத் தவிர்க்க முடியவில்லை.

"இருப்பின் துயர்கள் தாளாமல் 

முகமில்லாத நண்பன் 

சக்கரங்களடியில் கந்தல் சதையானான்"

இன்றும் இக்காட்சி நடந்தேறிய வண்ணமாகவே இருந்து வருகிறது. மனிதனின் மனதில் வாள் கொண்டு கீறும் கவிதை 'இன்னும் எலும்புகள்'. இந்தச் சமூக நலனுக்காக இயங்கும் ஒவ்வொருவரும் சந்திக்க நேரிடும் சமூக அவலங்களின் கூட்டு சேர்க்கையாக இக்கவிதை அமைந்துள்ளது. சமூகச் சிக்கலை ஒரு கவிதையில் உட்பொதிய செய்வதென்பது  கவிஞனுக்கு முன்னிருக்கும் சவால்களில் கடினமானது. கவிதையில் கருத்தையும் கருத்தில் கவித்துவத்தையும் பாலோடு நீரென கலந்து தரவேண்டும். அத்தகைய முயற்சியில் சுகுமாரன் வெற்றி பெற்றிருப்பதை இக்கவிதை எடுத்துக்காட்டுகிறது. சூழலில் ஆக்ரோஷமும் கவிதையின் நேர்த்தியான கட்டமைப்பும் சிக்கனமும் கவிதைக்கு உயிர்ப்பைத் தந்துள்ளன.

"எனது கதவைத் தட்டி கேட்காதே எதுவும்

மரணத்தால் விறைத்திருக்கிறது என் வீடு"


"இந்த நாட்கள் 

காக்கி நிற பேய்களால் நிர்வகிக்கப்படுகின்றன"


"எனது கதவை தட்டிக் கேட்காதே எதுவும் 

இன்று 

மனிதனாக இருப்பது குற்றம்"


ஜனநாயகம் தழைத்தோங்கும் இன்றைய காலத்தில் என்று பெருமைப்படும் சூழலை மறு சிந்தனைக்கும் அரசு எந்திரம் எப்படிப்பட்டது யாருக்கானது என்ற அடிப்படைக் கேள்விகளை மனதில் வேரூன்ற வைக்கும் அடிநாதம் இவ்வரிகள்.

மனிதனின் வாழ்தலுக்கான தேவை வேரோடு பிடுங்கி எறியப்படும் போது அவனது மனம் நம்பிக்கையின் ஆணி வேரை நோக்கி பயணப்படுகிறது. சமூகம் குடும்பம் நண்பர்கள் உறவினர்கள் என்ற சூழல் அர்த்தமற்றுப் போகும்போது துரோகத்தின் உருவாக, புறக்கணிப்பின் ஊற்றாகத் திசை மாறும்போது மனித மனம் கண்டடையும் பேரமைதி, இசையிலும் இயற்கையிலும் இருக்கிறது. அதுவே தொடர்ந்து வாழ்தலுக்கான நம்பிக்கை விதையைத் தூவி செல்கிறது.


"பயந்து

அடைக்கலம் என்று வந்தால்

யாருடையதோ போல வரவேற்கும் வீடு"


"தற்கொலைக்கும் துப்பாக்கி முனைக்கும் நடுவில்

நமது வாழ்க்கை"


"காத்திருக்கிறது நம்பிக்கை

பனிப் பாறைகளைப் பிளந்து மூச்சுவிடும் செடி போல"


அலைந்து திரிதல் வாழ்க்கையாகிப் போனது. நினைவுகளில் ஊர்களும் மலைகளும் பாறைகளும் உருவம் பெற்று உலாவி திரிகின்ற அனுபவத்தை உதகமண்டலம் எடுத்துக் கூறுகிறது. இயற்கைக்கும் செயற்கைக்கும் இடையே பணப்பேயின் கோரதாண்டவம் வினையாற்றும் சூழல் அழிவையும், இத்தனைக்குப் பிறகும் இயற்கை கருணையோடு அனைவரையும்  அணைத்துக் கொள்ளும் பேரன்பும் இங்கே அமைதி கொள்ள செய்கின்றன.

"எளிமையானது உன் அன்பு

நடு ஆற்றில் அள்ளிய தண்ணீர் போல"

இந்நூலில் கோடை கால குறிப்புகள் என்ற தலைப்பில் ஐந்து கவிதைகள் இடம்பெற்றுள்ளன. வாழ்க்கையில் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் துளியளவும் இல்லாதபோது நிமிடங்கள் முன்வைக்கும் ஆற்றாமையின் நிஜமாக இச்சமூகம் அமைந்து விடுகிறது. சிறுகோட்டுப் பெரும்பழமாகத் துன்பத்தின் கனம் கூடும்போது மடைமாற்றத்தில் தத்தளிப்பின் சிறுதக்கையென கவிதைகள் ஆசுவாசப்படுத்துகின்றன. அத்தகைய கனத்தைத் தாங்கி வாசகனைக் கனமாக்கும் கவிதைகள் இவை.


"நான் போன ஊரில்

நதி வறண்டு போய்க் கிடந்தது"


"எப்போதும் நாம் வாழ்வது கோடை காலத்தில்"


"இரண்டு ரொட்டித் துண்டுகளின் நடுவில் இருந்து

தொடங்குகிறது இன்றைய அலைச்சல்"


"எனக்கு உன்னிடம் பகையில்லை

அன்பைப் போலவே"


"எங்கோ

மழைக்காகக் காத்திருக்கிறது வெடித்து போன நிலம்"


இவ்வாறு பற்றுக்கோடுகள் அனைத்தும் பற்றற்றுப் போகும்போது கவிதையும் அன்பும் உள்மனத்திலிருந்து ஊற்றாகச் சொரிந்து கொண்டே இருக்கின்றன. காலம் என்ற எல்லைகள் தாண்டி நித்திய வாழ்வைப் பெற்றுவிட துடிக்கும் அனைத்தும் அன்பின் உள்ளடக்கம். சுகுமாரனும் கண்டடையும் வாழ்க்கையின் உச்சாணிக் கொம்பு அன்பும் கடந்து செல்லுதலும் தான்.

தமிழ்க் கவிதை வெளியில் தொடர்ந்து கவனிக்கப்படக் கூடியவராகச் சுகுமாரன் இருந்து வருகிறார். தன்னைச் சுற்றிலும் நிகழ்ந்து வரும் அனைத்தையும் நீரோடை என காட்சிப்படுத்தி விட்டு தனது பயணத்தை ஓசையின் மென்மையில் அமைதியின் இருத்தலில் பேரன்பின் கவிதை மொழியில் வடித்துக் கொண்டே செல்கிறார். குறைவான எண்ணிக்கையில் கவிதைகள் வெளிவந்தாலும் கல்வெட்டென நிலைத்து நிற்கும் வாழ்க்கைச் சாரம் ததும்பி வழிகிறது அதில். 

இவரின் கோடை காலக் குறிப்புகள் நல்ல ஆன்மாவின் சராசரி எதிர்பார்ப்புகளாலும் சமூகத்தின் கொடூர அரசியல், பண  அதிகார வன்முறைகளாலும் ஏற்பட்ட மன உந்துதலால் தீட்டப்பட்ட காலத்தின் அழியா ஓவியங்கள்.

நன்றி  :சொல்வனம் 251வது இதழ்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்