ஆறுதலுக்காய்ச் சில சொற்கள் - கவிதை

 ஆறுதலுக்காய்ச் சில சொற்கள்


தெருநாய்கள் முறைத்துப் பார்க்க

தயக்கத்தின் பெரும் சுமையில்

கேட்பாரற்று நிற்கின்றேன்


என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள 

மனம் விரும்பவில்லை காட்டுக்

குருவியின் ஒளிதலைப் போல


ஆள்பிடிக்க பழக்கப்பட்டு ஆசுவாசப்பட 

இன்னும் முடியவில்லை பின்நவீனத்துவத்தின் அனைத்துக் 

கோட்பாடுகளும் வந்து போகின்றன


நாகரீக விழுமியங்கள் 

கண்ணாடி பொருளென 

உடைந்து பொருளற்று 

சுக்கு நூறாய் சிதறிக்கிடக்கின்றன


பொய்களுக்கு பழக்கப்பட மறுக்கும் மனமும் 

பொய்யாய்ப் போய்விட்ட பிழைப்பும் - நகைமுரண்


படிமமும் குறியீடும் அமைப்பியலும் கட்டுடைப்பும் என்னை உடைத்து 

நொறுக்குகின்றன


என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள 

சொற்கள் அவமானப்பட்டு நிற்கின்றன


ஆலமரத்தடியில் துண்டறிக்கைக் 

கனம் கூட்ட 

பசி மயக்கத்தில் கொண்டுவந்த 

உணவைக் குடிநீரற்று விழுங்கிக் கொண்டு இருக்கிறேன்


கடந்து செல்லவேண்டிய தொலைவும் 

தாக்குப் பிடிக்க வேண்டிய நெருக்கடியும் 

அருகில் 

கட்டப்பட்ட மாடு உற்று நோக்குகிறது என்னை பார்த்து.


சிரித்துக்கொண்டே 

துண்டறிக்கைகளை எடுத்துத் 

தெருக்களில் பயணிக்கிறேன் 

தொலைத்துவிட்ட வாழ்வைத் தேடி


என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள 

மொழி 

தயங்கி நிற்கிறது என்னைப் போலவே.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்