கவிதை

 

சிகப்பு புளியங்கா


பனைமரக் கூட்டங்களில் தொங்கும்

பானைகளும் கள்மணமும்

 
மீன் பிடிக்கத் தூண்டில் போடும்
இளவட்டங்களின் சுறுசுறுப்பும் எருமைகளின் சலசலப்பும்
 
துணி துவைக்க வந்தமர்ந்த அவளின்
பார்வையில் ஒரு முத்தத்திற்கான ஏக்கம் 
 
ஒற்றை மரமாய் தனித்திருக்கும் புளியமரம்
பல கதைகள் பல புதிர்கள் அதற்குண்டு 
விவரம் தெரிந்த காலம் தொட்டு அருகில் செல்வதில்லை
 
தூக்கில் தொங்கியவள் சுற்றித்திரியும் மரமும் மரத்தடி நிழலும் 
 
அச்சத்தின் பெருஞ்சுமையில் இரண்டு கல் தொலைவு சுற்றிச்செல்ல பழக்கப்பட்டுவிட்டன மனமும் கால்களும்
 
நகர வளர்ச்சியில் வீடுகளின் வருகையில் புளியமரம் தனது புதிர்களை இழந்துவிட்டது
புளியங்காய் பறித்துக் கொண்டிருக்கும்
அவளுக்குப் பயமேதுமில்லை
 
தூரத்தில் தயங்கி நிற்கும் என்னைக்
கண்டு சிரித்துக்கொண்டே சொல்கிறாள்
‘இது சிகப்புப் புளியங்கா நல்லா இருக்கும்’ என்று
 
சற்று உள்நடுங்கி முகம் வியர்த்துப்
பார்க்கிறேன் சிகப்பு புளியங்காவை
ருசித்து மெல்லும் அவளை!
 
நடுக்கத்தின் உச்சத்தில் மென்று விழுங்கிய
புளியங்காவின் சிகப்பு புளித்திருந்தது.
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்