கட்டுரை

 

கதையும் மொழிதலும் - 1 கி.ராவின் 'பலம்'


முனைவர் ம இராமச்சந்திரன்

உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்

ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.

ramachandran.ta@gmail.com

9360623276

கி.ரா. அறிமுகமாகி முப்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. திருநெல்வேலி (கரிசல் வாழ்க்கை) வாழ்வின் வளமைகள் துல்லியமாகத் துலங்கும் கதைகள் இவருடையவை. கல்லூரி காலங்களில் கதவு சிறுகதையைப் படித்துவிட்டு மயங்கித் திரிந்த நாட்கள் உண்டு. இன்றும் பழமையான வீடுகளைக் கடந்து செல்லும் போது கி.ராவும் உடன் கடக்கிறார். சமீபத்தில் இவரின் பலம் சிறுகதையைப் படித்துவிட்டு எனது தந்தையின் நினைவுகளுடன் பல நாட்கள் கடந்து சென்றன. இந்தக் கதை அலையோசையில் 1980 இல் வெளிவந்துள்ளது.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு மனநிலையில் அவனது பலம் ஏதோ ஒன்றில் ஈர்க்கப்பட்டு விடுகிறது. பணப்புழக்கம் பரவலாக்கப்பட்ட சூழ்நிலையில் அதன் ஆளுமை பலரைக் கவர்ந்திழுந்தது. நிலத்தின் மேல் கொண்ட மதிப்பு பண மதிப்பாக மாற்றப்பட்டக் காலம். கிராமத்தில் நிலப்புலம் எவ்வளவு இருந்தாலும் கையில் காசு இல்லையென்றால் ஏற்படும் மன அவலம் இக்கதையின் மையப் பொருளாகும்.

செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாதபோதும் கையில் இருக்கும் பணம் ஏற்படுத்தும் அதீத மன தைரியமும் சமூகத்தை எதிர்கொள்ளும் தன்மையும் அலாதியானது. இருக்கும்போது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தாத பணம் கையில் இல்லையென்றால் வீட்டைவிட்டு வெளியில் செல்ல மனம் விரும்புவதில்லை. இயற்கையைச் சார்ந்து அறிவின் துணையில் கைவீசி வாழ்ந்த மனித வாழ்க்கை சட்டைப்பைக்குள் மடித்து வைக்கப்பட்ட பணக்காகிதத்தில் முடங்கிப்போன அவலத்தையும் மாற்றத்தையும் இக்கதையில் போகிறபோக்கில் சொல்லிச்செல்லும் இவரின் ஆற்றல் வியக்கத்தக்கது.

தென் மாவட்டங்களில் இத்தகைய மனநிலையைப் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்ததுண்டு. சொந்த வீடு, விவசாயம், சுயதொழில், தற்சார்பு என்று வாழும் மக்களின் மனநிலை சட்டைப் பையில், ட்ரவுசர் பையில் இருக்கும் பத்து ரூபாய் நோட்டுதான் திருப்தி அளிக்கிறது. வெறும் கை என்பது அவமானத்தின் அத்தாட்சி, வாழத் தெரியாதவனின், வாழ்ந்து கெட்டவனின் இருத்தல் ஆகையால் எப்போதும் கையில் பணம் இருக்க வேண்டும். இந்தச் சிந்தனை மனநிலையே இவர்களின் வாழ்க்கைச் சூழலை நகர்த்திச் செல்கிறது. 

சென்று வருவதற்கு நூறு ரூபாய் போதும் என்றாலும் ஆயிரம் ரூபாய் கையில் இருந்தால் மட்டுமே செயலில் தன்னம்பிக்கையும் உள்ளத்தில் இருமாப்பும் உறுதிபடுகிறது. அவ்வாறு இல்லையென்றால் வராத விருந்தாளி வருவதாகவும் உதவிக் கேட்டு உறவுக்காரன் வந்துவிட்டால் என்ன செய்வது என்பதுமான எண்ண ஓட்டத்தின் பதற்ற நிலையையும் அவர்களால் தவிர்க்கவே முடியாது. அத்தகைய பதற்ற மனநிலையே இக்கதை. கழுத்து நிறைய நகை போட்டு வருகின்ற மனைவியைக் கண்டாலும் கையில் பணம் இல்லாத நிலையும் அதனை வெளிப்படுத்த தயங்கும் வறட்டு மரியாதையும் மனைவியின் தாராள மனநிலையும் குடும்ப வாழ்க்கையின் யதார்த்த போக்கும் கதையில் இயல்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

மன அவத்தையில் வெளியில் கிளம்ப உந்தித்தள்ளும் மன இறுக்கமும் பணம் இல்லாமல் தடுத்து நிறுத்தப்படும் எண்ண ஓட்டமும் கெளரவம் என்ற பண்பாட்டின் செயல்பாடுகள் தகர்ந்துவிடுமோ என்ற சூழலும் காசு இருக்கும்போது ஒருவரும் உதவி கேட்பதில்லை பணம் இல்லாதபோது கேட்டு வரும் நிதி வசூல் செய்பவர்களையும் நினைத்துப் பார்க்கும் கையறுநிலை ஒவ்வொரு மனிதனின் மனப்போக்கையும் எளிதில் சொல்லிவிடும் அல்லது பிரதிபலித்துவிடும் தன்மைக் கொண்டது. குடும்ப உறவில் வாழ்ந்தாலும் கணவன் வரவு செலவு என்றும் மனைவி வரவு செலவு என்றும் வருமானத்தின் போக்குகளைப் பதிவு செய்யும்போது ஒவ்வொருவரின் சொந்த இருப்புக்கான வாழ்வியல் களங்கள் உருவாக்கப்படுவதும் அதில் ஒருவருக்கொருவர் கண்ணியத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்ற எழுதப்படாத அறநெறியையும் இங்கே காண முடிகிறது. வீட்டில் மாடு, பால், தயிர் மூலம் வருகின்ற பணம் மனைவியின் இருப்பில் இருப்பதும் இவற்றை எதிர்பார்க்கக் கூடாது என்ற தற்கெளரவமும் கணவனின் நிலை உணர்ந்து இருபது ரூபாய் நோட்டை நீட்டும் மனைவியின் இணைச்செயலும் இருவருக்குமான வாழ்வியல் பிணைப்பை உறுதி செய்கின்றன.

அவர் நடந்து செல்லும் கம்பீரமும் தன்னம்பிக்கையும் அவர் சட்டைப் பையில் திணிக்கப்பட்ட இருபது ரூபாயில் இருந்து உயிர் பெற்றது. மனிதனுக்கு

என்ன தான் சொத்துடமை இருந்தாலும் காசில்லாமல் ஊர் சுற்றுவது மனநிலை ரீதியில் முடியாத செயலாக இருக்கிறது. உடலில் உயிர் இருப்பது போல மனித இயக்கத்தில் பணம் உயிர்நாடியாக மாறிப்போன பணப் பண்பாட்டைப் பதிவு செய்கிறது பலம் சிறுகதை. உடல் வலிமை தாண்டி பணமே உளவலிமை என்றான காலத்தைப் பிரதிபலிக்கும் அற்புதக் கதை இது.

நன்றி: வல்லமை.காம்

18.6.2021


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்