ஆய்வுக் கட்டுரை

 

காம மறுப்பு: மூன்றாம் பாலினமும் வன்முறையின் உச்சமும் (சு.வேணுகோபாலின் பால்கனிகள் நாவலை முன்வைத்து

‘காமக் கடல்மன்னும் உண்டே அது நீந்தும்
ஏமப் புணை மன்னும் இல்’ (குறள் 1164)

உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிரினத்துக்கும் இங்கு வாழ்வதற்கான முழு உரிமை உண்டு. காமத்தாலும் காதலாலும் பின்னிப் பிணைந்த வாழ்க்கையில் மறுக்கப்படும் காமத்தாலும் ஒதுக்கப்படும் காதலாலும் வாழ்வியல் சிக்கல்கள் தோன்றுகின்றன. வாழ்வியல் சிக்கலும் போராட்டமும் ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்குமானதாக இருக்கலாம், ஒரு மனிதனுக்கும் ஒரு குடும்பத்திற்குமானதாக இருக்கலாம். ஒரு மனிதனுக்கும் ஒரு சமூகத்திற்குமானதாக இருக்கலாம். ஒரு பாலித்திற்கும் இன்னொரு பாலினத்திற்குமானதாக இருக்கலாம். இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் காமத்தாலும் காதலாலும் சிக்குண்டு அல்லாடும் இவ்வாழ்க்கைச் சூழ்நிலையில் ஒரு குடும்பத்தில் மூன்றாம் பாலினமாகப் பிறந்த ஒருவனின் அல்லது ஒருத்தியின் காமம் சார்ந்த உளவியல் சிக்கல்களையும் சமூகச் சிக்கல்களையும் கேள்விக்குள்ளாக்கும் நாவல் பால்கனிகள். இந்நாவலை சு.வேணுகோபால் எழுதியுள்ளார். இதனைத் தமிழினி அதிகப் பிழையோடு வெளியிட்டுள்ளது.

இன்றைய இருபத்தொன்றாம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் மூன்றாம் பாலினத்தவருக்கான உரிமைகள் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதை உற்றுநோக்கும் சூழலில் பால்கனிகள் நாவல் முக்கியத்துவம் பெறுகின்றது. ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகள் இன்றளவும் இந்திய, தமிழ்ச் சமூகத்தை வந்தடையவில்லை. மூன்றாம் பாலினத்தவர்கள் இச்சமூகத்தில் வாழ தகுதியற்றவர்கள் என்ற எண்ணமோ அல்லது பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்படக் கூடியவர்கள் என்ற எண்ணமோ அல்லது இழி பிறவிகள் என்ற எண்ணமோதான் மேலோங்கி நிற்கிறது.

பிறந்து வளர்ந்த குடும்பமே ஒதுக்கித்தள்ளுதல், ஆண் பெண், சார்ந்து பழகிக்கொள்ளும் நடைமுறையில் ஒவ்வாமை, கேலி, கிண்டல், அதிகார மீறல் என்ற சமூகக் கொடுமைகள், தனக்கான பாலியல் சுதந்திரத்தைப் பெறமுடியாமல் தவிக்கும் நிலை. வேலைவாய்ப்பில் புறக்கணிப்பு, பொது இடங்களில் அருவருப்பான பார்வை, பாலியல் சீண்டல்கள் என்று மூன்றாம் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள் அதிகம். இதன் விளைவு சமூகத்தைச் சீண்டும் நாகரிகத்தை உடைக்கும், மதிப்பீடுகளைச் சின்னாபின்னப்படுத்தும் நடத்தை சார் எதிர்வினைக்குத் தள்ளப்படுகிறார்கள். இப்படிபட்ட பாதிப்புகளுக்கு உள்ளான ஒருவன் கிட்ணன்.

இந்நாவலின் கதை கம்பம், மதுரை, கோவை ஆகிய இடங்களில் நகர்ந்து செல்கிறது. இந்த நகர்வுகள் அனைத்தும் கிட்ணனின் வாழ்க்கைச் சிக்கலின் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளன. நாவல் முழுவதும் பெண்களுக்குப் பிடித்தமானவனாக வலம் வருகின்ற கிட்ணன் பிறகு பெண்ணாக மாறும்போதும் அவர்களின் எண்ணத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படுவதில்லை. திவ்யாவின் மூலமாகக் கதை சொல்லப்படுகிறது. கிட்ணன் சிறுவயதில் மற்றவர்களோடு விளையாடும்போது எந்தப் பாலின வேறுபாடும் இல்லாமல் இருந்து வருகிறான். சற்று வளர்ந்த பிறகு வேட்டிக் கட்டிக்கொள்ளும்போதும் நடந்துவரும் போதும் அவனிடம் பெண் சாயல் வந்துவிடுகிறது. வீட்டில் உள்ளவர்களும் ஊரில் உள்ளவர்களும் கேளி செய்தாலும் அவனுக்கு தான் ஒரு பெண் என்ற உணர்வு வரவில்லை. மற்றவர்களும் கேலி செய்தார்களே அன்றி அவனைப் பெண்ணாக எண்ணவில்லை.

ஊரில் நடைபெற்ற மாரியம்மன் திருவிழாவில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு இவனும் கலந்துகொண்டு ஆடிய ஆட்டமும் பெண் உடையும் அனைவரையும் கவர்ந்து இழுத்தது. மோகினி என்று அழைக்கும் அளவுக்கு இவனின் பெண் சாயல் வளர்ச்சிநிலைக் கண்டது. சமையல் செய்வதில் மிகவும் நேர்த்தியை கையாழுவதும் பெண்களுக்குத் தெரிந்த சமையல் சாகசங்கள் அவனிடம் இருப்பதும் அவனது குடும்ப உறவான பெண்களுக்கு இவன் மேல் அக்கறையும் பற்றும் ஏற்பட்டுவிட்டது. இவனின் அம்மா உடல் நலிவால் படுக்கையில் கிடந்தபோது அவருக்கு அனைத்து உதவிகளையும் பெண்ணாகவும் ஆணாகவும் இருந்து செய்து வந்தான். அம்மாவின் மறைவு அவனுள் இருக்கும் பெண்மையை உணரச்செய்தது.

அவனோடு படித்த நண்பனும் ஊரில் உள்ள விடலைகளின் சீண்டலும் உறங்கிக்கிடந்த பெண்மையை உசுப்பிவிட்டன. தான் ஆணல்ல பெண் என்பதை காமச் சீண்டலின் மூலம் உணர்ந்து கொண்டான் கிட்ணன். ஊராரின் ஏச்சுக்கும் உடன்பிறந்த அண்ணன் அடிக்கும் அப்பாவின் புறக்கணிப்புக்கும் வடிகாலாய் திவ்யா விளங்கினாள். அம்மாவின் மறைவுக்குப் பிறகு காமத்தின் பெரும்பேயும் சமூகத்தின் வன்கொடுமையும் அவனை ஊரைவிட்டு ஓடச் செய்தன. ஓடியக்கால்களும் உழன்ற மனமும் அவனை அவளாக்கியது. யாருக்கும் பயந்து வாழவேண்டியதில்லை. அவன் அவளாகச் சுதந்திரமாகச் சுற்றித் திரியத் தொடங்கினான்.

அண்ணன் மகனுக்கு மொட்டை அடிக்க போகிறார்கள் என்பதைக் கேட்டு சொந்த ஊருக்குப் பெண்ணாக வந்தான் கிட்ணன். அவனைக் கண்டு ஊரே வியந்துபோனது. ஆனால் அவனை ஏற்றுக்கொள்ள யாரும் தயாராக இல்லை. பெண்களின் கருணையும் அவர்களின் கேலியும் பழக்கப்பட்ட ஒன்றாக மாறிப்போனது. அவனது அண்ணன் சுதாகர் அநாகரிக வார்த்தைகளைப் பேசி அடிக்க வந்தான். ஊரார் அவனை விலக்கிவிட்டனர். பிறந்து வளர்ந்து பேசி பழகிய குடும்பம் ஒதுக்கி தள்ளுவதைக் கண்டு கண்கலங்கி தனித்து நின்றான் கிட்ணன். அவனது அப்பாவும் அவனை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. தன்னைத் தேடி தனது இனத்தைத் தேடிப் பயணப்பட்டான் கிட்ணன்.

மதுரையில் திவ்யாவின் வீட்டிற்கு அடிப்பட்ட காயங்களோடு ஒருநாள் வந்தான். அவனைக் கண்டு பிறப்பின் இடர்பாடுகளை உணரத் தொடங்கினாள் திவ்யா. மறுநாள் வீட்டில் கிட்ணனைக் காணோம். அவளது சேலை , உள்ளாடை, செருப்பு, நகைகள் காணாமல் போயிருந்தன. மற்றவர்களாக இருந்தால் ஊருக்குத் தகவல் கொடுத்துச் சண்டைப் போடுவார்கள். ஆனால் சிறுவயது முதல் தம்பி என்று உடன் விளையாடியவன் அவளோடு மனதளவில் கலந்து விட்டவன் கிட்ணன். அவனுக்கும் ஒரே ஆறுதல் அவனது அம்மா. அவள் இறந்தபிறகு திவ்யா அக்காதான். அன்று சென்றவன் பிறகு அவனைப்பற்றிய எந்தத் தகவலும் வரவில்லை அவளுக்கு என்று கூறுவதை விட அவளைத் தவிர வேறு யாரும் அவனைப் பற்றி நினைக்கவில்லை என்பது தான் உண்மை.

தனது அண்ணனிடம் சொத்தில் தனக்குச் சேரவேண்டிய பங்கைத் தரவேண்டும் என்று கூறியபோது அவனது அண்ணனும் அப்பாவும் அவனை அடித்துத் துரத்தி விடுகின்றனர். ஊரார் கேலியும் கிண்டலும் செய்கின்றனர். இங்கே மூன்றாம் பாலினத்தவருக்குப் பரம்பரைச் சொத்தில் பங்கில்லை என்பதும் அவர்கள் மனிதனாகப் பார்க்கப்படுவதில்லை என்பதும் சமூகக் கொடுமை. அதைவிட அவனை யாரும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் அவலம் கொடூரமானது. இந்த உலகிற்கு அவனைக் கொண்டுவந்த பெற்றோரே ஏற்க மறுக்கும்போது இந்தச் சமூகம் எப்படி அவனை ஏற்றுக்கொள்ளும். இது யார் செய்த தவறு? கிட்ணனா? பெற்றோரா? சமூகத்தில் அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படும் மனிதர்களாக மூன்றாம் பாலினத்தவர் நடத்தப்படுவது மாற்றப்பட வேண்டிய சமூகத் கொடுமைகளில் ஒன்று.

திவ்யா பணியாற்றும் வங்கி நடத்தும் கருத்தரங்கில் கலந்துகொள்ள கோவை வருகிறாள். அங்குக் கிட்ணன் திவ்யாவை அடையாளம் கண்டு அவளிடம் பேசும்போது வியந்துபோகிறாள். என்றாலும் தன்னையும் மற்றவர்கள் பாலியல் சிண்டலுக்கு ஆளாக்கிவிடுவார்களோ என்ற அச்ச உணர்வு ஏற்படுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை. இப்போது இருக்கும் கிட்ணன் அமைதி சாந்தம் கொண்டவனாக இருக்கிறான். சுடிதார் போட்டு இயல்பான பெண்ணாகத் தோற்றம் தருகிறான். சற்று உற்று நோக்கினால் மட்டும் அவன் மூன்றாம் பாலினம் என்று தெரியவரும் என்பதால் சற்று ஆசுவாசப்பட்டுக் கொண்டாள்.

அவனோடு உறவாடியபோது தனது தோழி பார்கவியிடம் எனது தம்பி என்று கூற அதற்கு ‘இல்ல அக்கா நான் அவங்களுக்குத் தங்கச்சி’ என்று மறுக்கும் இடம் தனது அடையாளத்தை ஏற்றுக்கொள்ளும் மனம் வெளிப்படுவதைக் காணலாம். மீண்டும் மாலையில் சந்திக்கும் திவ்யா கிட்ணனுக்குக் குழந்தை இருப்பதைக் கண்டு வியந்து போகிறாள். அவன் வசிக்கும் வீடு மூன்றாம் பாலினத்தவர்கள் கூட்டமாக அங்கு வாழ்கின்ற பகுதியாக இருக்கிறது. ஒரு ஹோட்டலில் சரக்கு மாஸ்டராக இருந்து வருவதைக் கூறும் கிட்ணன் தனது மகனைப் படிக்க வைத்து பெரிய ஆளாக ஆக்க வேண்டும் என்று கூறும்போது புறக்கணிப்பின் வலி வெளிப்படுகிறது.

ஹோட்டல் முதலாளி வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பாலியல் தொல்லைக்கொடுப்பதைச் சகித்துக்கொண்டு வாழ்வதாகக் கிட்ணன் கூறும்போது சமூகத்தின் அவலம் புலப்படுகிறது. வேறு இடத்திற்குச் சென்றாலும் அங்கும் இவனைவிட மோசமான ஆள் இருக்கலாம். என்பதால் இங்கேயே தனது மகனுக்காக வேலை செய்து வருவதாக க் கூறும் கிட்ணன் மூன்றாம் பாலினமாகப் பிறந்ததற்காகப் படுகின்ற துன்பங்கள், அவமானங்கள், தொல்லைகள் போன்றவை திவ்யாவின் கண்முன் வந்து போகின்றன. திவ்யா தனது பர்சில் இருந்து ஐநூறு ரூபாயை எடுத்துக் குழந்தை கையில் வைக்கும்போது கிட்ணன் அழுது விடுகிறான். முதல் சொந்த உறவு ‘நீ தான் என் பிள்ளைக்குக் காசு கொடுத்திருக்க’ என்று அவன் பூரித்துப்போகும் நிலை உறவுக்காக ஏங்கும் தனிமையின் திக்கற்ற சூழலை வெளிப்படுத்துகிறது. பார்கவி ரயில்வே ஸ்டேசனில் குழந்தையைக் கொஞ்சி பணம் கொடுக்கும்போது வாங்கிக்கொள்ள கண்டிப்பாக மறுத்துவிடும் கிட்ணன் இச்சமூகத்தில் வாழவேண்டிய, அனைத்து உரிமைகளுடன் வாழவேண்டிய எலும்பும் சதையும் மனமும் கொண்ட சக உயிர் என்பதை ஒவ்வொருவரும் உணரும் தருணம் இது. அவனல்ல அவளாக வாழ்வதற்கு ஒரு சமூகம் எப்போது தயாராகிறதோ அப்போது இந்தச் சமூகம் நாகரிக எல்லைகளைத் தொடலாம்.

                        -முனைவர் ம இராமச்சந்திரன்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்