கவிதை

மனிதம் என்னுள்

                    -முனைவர் ம இராமச்சந்திரன்


இரப்பர் மரத்தில் வலிந்தொழுகும்

பாலென கண்களில் நிறைந்து கண்ணீர்


வாசல் பார்த்து அன்பைப் பொழியும் புள்புள் பறவை!

உன் அணுக்கம் ஆனந்தம் பெருக்கில் நான்!


நீ கட்டிய அழகான கூடு

ஆடம்பரமில்லாமல் இருக்கிறது

செயற்கையாக நாங்கள் வைத்த

எந்தப் பொருளையும் சீண்டக்கூட இல்லை நீ! 


இயற்கைச் சருகுகள் ஏற்படுத்திய

நம்பிக்கையை ஏற்படுத்த இயலாமல் நான்

உனக்கு எங்கள் மேல் நம்பிக்கை!

இல்லை...  இல்லை...

கூடு கட்டுவதற்கான இடத்தின் மேல் நம்பிக்கை.


இரண்டு நாட்களில் நீ கட்டிய

கூட்டைப் பார்த்து ஏமாற்ற உணர்வில்

வீட்டிற்குள் அனாதையானேன்!


உனது வருகையும் உனது கண்காணிப்பும்

என்னை அன்பு கொள்ள செய்கின்றன

வந்தமர்ந்து வாசல் பார்த்து நீ பேசும்

மொழியும் கண்களால் நான் பார்த்து

எனக்குள் பேசிக்கொள்ளும் எனது மொழியும்

ஒன்றுதான் அவரவர்களுக்கு


கூடு கட்டி பறந்து போகும் உன்னைப் பார்த்தே

எனக்கு அடிக்கடி தோன்றுகிறது

இன்னும் செத்துவிடவில்லை மனிதம் என்னுள்!

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்